கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், என்.சந்திராபுரம் ஊராட்சியிலுள்ள சாலைப் புதூர் கிராமத்தில் 200க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அங்கன்வாடி மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதற்கிடையில் அங்கன்வாடி மையம் ஓட்டுகள் வேய்ந்த சிறிய வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அத்துடன் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரித்து கொடுக்க சமையல்கூடம் இல்லை. இதன் காரணமாக அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் குழந்தைகளுக்காக உணவு சமைக்கின்றனர்.
இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் சமையல் செய்ய முடியாமல் சமையலர் திணறி வருகிறார். இவ்வாறு திறந்த வெளியில் உணவு சமைப்பதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி மழை காலத்தில் அந்த ஓட்டு கட்டிடம் ஒழுகுவதால் குழந்தைகள் அமர்ந்து படிக்க முடியாத நிலை இருக்கிறது. அதுபோன்ற நேரங்களில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தின் வெளியே அமர்ந்து படிக்கும் சூழல் நிலவி வருகிறது.
இது தொடர்பாக என். சந்திராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராணி ரமேஷ் கூறியிருப்பதாவது “சாலைப்புதூரிலுள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு அருகில் தொடக்கப் பள்ளியில் திறந்தவெளியில் சமையல் செய்து உணவு கொண்டு செல்லப்படுகிறது. ஆகவே அங்கன்வாடி மையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. புது கட்டிடம் கட்டித்தரவில்லை எனில் பொதுமக்களை திரட்டி பொள்ளாச்சி-திருப்பூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபடுவோம்” என்று அவர் கூறினார்.