வட மேற்கு தில்லியின் ஜஹாங்கீர் பூரி பகுதியில் சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் கல்வீச்சும், சில வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் காவலர்கள் பலர் காயமடைந்துள்ளனர். வன்முறையைத் தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது பற்றி வட மேற்கு காவல் துணை ஆணையர் கூறும்போது, இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் காவல்துறையினர் 8 பேர் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு குண்டடிபட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என கூறியுள்ளார். பின் கூறும்போது, இது தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.