மகாதீபம் ஏற்றப்படும் 2668 அடி உயரம் கொண்ட அழகிய மலை. லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் கிரிவலபாதை. அஷ்டலிங்க கோவில்கள், ரமணர் ஷேசாத்ரி, விசிறி சாமியார் ஆசிரமங்கள், சித்தர் ஜீவசமாதிகள், மடாலயங்கள் போன்றவை திருவண்ணாமலை தொகுதியில் முக்கிய அடையாளங்கள். திருவண்ணாமலை தொகுதியில் 1967 ஆம் ஆண்டு முதல் 12 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக 8முறையும் இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளன. 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.வா. வேலு 1,16,484 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2,79,174 வாக்காளர்களில் பெண்களே அதிகம். தொழில் வளர்ச்சி இல்லாத திருவண்ணாமலையில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் ஏராளம். 110 விதியின் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இன்னும் அறிவிப்போடு தான் இருக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருவண்ணாமலையில் அவர்களுக்காக அடிப்படை வசதிகள் கூட முழுமையாக இல்லை. நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.
வசதிகளற்ற காய்கறி, பூ அங்காடிகள் நிரந்தர வாகனம் நிறுத்துமிடம் இல்லாதது முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் ரயில்வே மேம்பாலம் பணி, மூடப்பட்ட டான் காப் எண்ணெய் ஆலையால் தொழிலாளர்கள் வேலை இழப்பு என பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் பட்டியலிடுகின்றனர் தொகுதி மக்கள். ஆனால் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் இயன்றவரை மக்களுக்குக்கான வசதிகளை செய்து கொடுத்திருப்பதாக இத்தொகுதியின் எம்எல்ஏ ஏ.வா. வேலு கூறுகிறார்.
ஏழை எளிய மக்கள் வந்து செல்லும் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மாவட்டத்தின் தலைநகராக மாறி பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட அடிப்படை வசதிகளின்றி உள்ளது திருவண்ணாமலை. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் வசதி இல்லாதது, காணாமல் போன நீர்நிலைகள், குளங்கள் என தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்கிறது. காலத்திற்கு ஏற்ப தொகுதிகள் வளர்ச்சி வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு.