திண்டுக்கல் தொகுதியில் நடிகை ரோகினி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் தொகுதியில் நடிகை ரோகினி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பெண்ணுரிமை என்பது தமிழகத்தில் கேள்விக்குறியான ஒன்றாக தான் உள்ளது. தூத்துக்குடியில் சுத்தமான காற்று வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் 13 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். விவசாயிகளும், பெண்களும் எட்டு வழி சாலை தேவை இல்லை என்று போராடி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் தேவையில்லாத திட்டங்களை கொண்டுவந்து இலாப நோக்கில் தருவதாக அரசுகள் முயற்சிக்கின்றனர். பொள்ளாச்சி சம்பவத்தில் சிறுமிகள் அநியாயமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு இன்னும் நீதி கொடுக்கவில்லை. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இந்த பிரச்சனையில் தலையிட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். ஜி.எஸ்.டி வரியை குறைக்கும் முதல்வரே தற்போது இந்த தமிழகத்திற்கு தேவை. விலைவாசி உயர்வை பற்றி மத்திய மாநில அரசுகள் சிறிதும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது இலவசங்கள், மக்கள் பிரச்சனைகள் ஆகியவை குறித்து பேசி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எந்தவித கண்டனமும் தெரிவிக்காத தமிழக அரசு தற்போது மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கிறார். இந்த ஆட்சியை அகற்றி மக்கள் மதச்சார்பற்ற தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அவர் பேசினார்