தமிழகத்தில் மது கடைகளை மூட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போதை பொருள் விற்பனைக்கு துணை போனால் அவர்களுக்கு எதிராக நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்றும் முதல்வர் சமீபத்தில் கூறினார். இந்த வார்த்தைகள் முதல்வருக்கு எதிராக கிளம்பியுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம் என்றும், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் போதைப் பொருளில் சேராதா என்று தேமுதிக தலைவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் முதல்வர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரான எச். ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் முதலில் மூட வேண்டும். அவர் தகப்பனார் செய்த தவறை அவர் தான் சரி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மட்டும் தான் மதுபான கடைகள் திறக்கப்பட்டது போன்றும், அதன் பிறகு தற்போது ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் தான் மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெறுவது போன்றும் இருக்கிறது. அதோடு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் மதுபான கடைகள் செயல்படாதது போன்று அவருடைய கருத்து இருக்கிறது.
போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க முதல்வர் உறுதி என்பது உண்மையானால் அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூடுவதுதான். அவர்தகப்பனார் செய்த தவறை அவர் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
— H Raja (@HRajaBJP) August 12, 2022
தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தான் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இந்த மதுபான கடைகள் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மூடப்பட்டாலும் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்ததால் வேறு வழியின்றி மீண்டும் எம்ஜிஆரே மதுபான கடைகளை திறப்பதற்கு உத்தரவிட்டார். தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு முக்கிய காரணம் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் தான். மேலும் அதிமுக கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்திருப்பதால் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை குறிப்பிடாமல், கருணாநிதியை மட்டும் குற்றவாளியாக பதிவு செய்திருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து எச். ராஜாவுக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.