அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சமீபத்தில் தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. இவற்றில் தி.மு.க நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி ஆபாசமாக பேசினார். இதையடுத்து அவரது பேச்சுக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி அவரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைதாகி விடுதலையானார்.
இச்சூழலில் சைதைசாதிக் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்வரை ஓயப் போவதில்லை என அறிவித்த குஷ்பு, இன்று டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார்மனு அளித்தார். அதில், சாதிக்கின் பேச்சு குறித்த வீடியோ ஆதாரத்தையும் இணைத்து கொடுத்துள்ளார். மேலும் புகாரில் அமைச்சர் மனோதங்கராஜ் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். புகாரளித்த பின் செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியதாவது “எனக்கே இந்த கதி எனில் மற்ற பெண்களுக்கு தமிழகத்தில் என்ன கதி ஏற்படும்..?
அமைச்சர் பொறுப்பிலுள்ள மனோ தங்கராஜ் தூங்கிவிழித்து 4 நாட்களுக்கு பின் நான் விளம்பரம் தேடுவதாக கூறி இருக்கிறார். அதனை கேட்டதும் சிரிப்புதான் வந்தது. நானும், அவரும் பொதுவெளியில் நின்றால் அவரை எத்தனை பேருக்கு அடையாளம் தெரியும்..? அவருக்குத்தான் தற்போது விளம்பரம் தேவை. அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்தான் அவ்வாறு பேசி உள்ளனர். என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் எனக்கு மன்னிப்பு தேவையில்லை, நடவடிக்கைதான் தேவை. இதற்கிடையில் அமைச்சர் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அத்துடன் சைதைசாதிக்கை கட்சியிலிருந்தே நீக்கவேண்டும்” என்று பேசினார்.