வியாபாரியின் வீட்டிற்கு தீ வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மகாதேவன் குளம் ஈசன் கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தி.மு.க கிளை செயலாளரான சுடலைமணி என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சமோசா வியாபாரியான முத்து என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது முத்து சுடலை மணியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சுடலைமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுடலை மணியின் அண்ணனான பெருமாள் என்பவர் முத்துவின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். இதனால் வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சமோசா தயாரிக்கும் எந்திரம், குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.