திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சியில் உள்ள ஜீவா தெருவில் வசித்து வருபவர் திவாகர் (33). இவர் தி.மு.க-வின் பொன்னேரி நகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரஞ்சனி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் கிராமத்தில் பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையை இவர் நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் ஐந்து பேர் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திவாகர் அவரது கடையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து திவாகரின் மனைவி ரஞ்சனி பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, எனது கணவரும் அவரது கடையில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளத்தொடர்பு பற்றி பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் எனது கணவரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த எனது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.