தி.மு.க கட்சியின் செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கேனரிக்குப்பம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வின் மாவட்ட செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு சைலஜா என்ற மனைவி உள்ளார். இவர் கேனேரிக்குப்பம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேகர் தனது மோட்டார் சைக்கிளில் தலையாரி என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை மறித்து அவரை அரிவாளால் வெட்டி பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சேகர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகர் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்யப்பட்ட மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.