Categories
மாநில செய்திகள்

தி.மு.க முப்பெரும் விழா…. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது “செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன் பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்துவிடும். இது நமக்கான மாதம் ஆகும். திராவிடர்க்குரிய மகத்தான மாதம் என்ற எண்ணம் நம் உணர்வெங்கும் ஊற்றெடுத்து ஓடும். ஈரோட்டுப் பூகம்பம்-பகுத்து அறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மாதம், செப்டம்பர் மாதம் தான். அவருடைய லட்சியப்படையின் இணையற்ற தளபதியாக இயங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம் தான்.

பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட நம்உயிரினும் மேலான இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம் தான். இதன் காரணமாக செப்டம்பர் மாதம் என்பது திராவிட இயக்கத்தின் தனிச்சொந்த மாதம். நம் உயிர் நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர், செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை முன்னெடுத்து கழகத்தின் கொள்கை, பார்மீது பட்டி தொட்டியெங்கும் முழங்கும் சீர்மிகு திருவிழாவாக நடத்தி நமக்கெல்லாம் நல்வழி காட்டி இருக்கிறார். இந்த சிறப்புமிக்க முப்பெரும் விழா இந்த வருடம் செப்டம்பர் 15ஆம் நாள் பெருமைமிகு விருது நகரில் நடைபெறுகிறது.

ஆயிரமாயிரமாய், லட்சோப லட்சமாய் திரண்டுவரும் உடன்பிறப்புகளாம் உங்களின் வருகையால், கடனில்லா விருதையில், பொங்கு மாங்கடல் புகுந்ததோ என நினைக்கும் அளவுக்கு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற உங்களில் ஒருவனான நான், கழகத் தலைவர் என்ற முறையில் அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறேன். செப்டம்பர் 15ஆம் தேதி நம் கழகத்தினை உருவாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாள். அதை மனதில்கொண்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குகிற மகத்தான புது திட்டம் தொடங்கப்பட உள்ளது . 100 வருடங்களுக்கு முன்பே பள்ளிகளில் இலவசஉணவு வழங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |