பயங்கர தீ விபத்தால் வீட்டின் சமையலறை எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஏமன்குளம் பகுதியில் செல்வகுமார்-கௌரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். செல்வகுமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கௌரி தனது பிள்ளைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென சமையலறையில் இருந்து ஒரு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கௌரி சமையலறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின்கசிவின் காரணமாக ப்ரிட்ஜ் தீ பிடித்து அணைத்து இடங்களுக்கும் தீ பரவியது தெரியவந்தது. உடனே கௌரி தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
இதுகுறித்து நாங்குநேரி தீயணைப்பு துறையினருக்கு கௌரி தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. மேலும் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் போன்றவைகளும் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. இதுகுறித்து நாங்குநேரி காவல்நிலையத்தில் கௌரி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.