பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலை பகுதியில் கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கைலாசநாதர் கோவிலில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தின் துணை ஆணையர் கைலாசநாதர் கோவிலில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை ஆய்வு செய்தார். அதன்பின் கம்பிவேலியின் இருபுறமும் கேட் அமைப்பதற்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி இருபுறமும் கேட் அமைக்கப்பட்ட பிறகு கோவிலின் அருகே உள்ள ஒரு கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.
இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி தற்போது இருக்கும் நிலை தான் தொடர வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தீண்டாமை கம்பி வேலியை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கம்பி வேலியை அகற்றுவது தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறியுள்ளனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.