தமிழகத்தில் பெரும்பாலும் எந்த பண்டிகையாக இருந்தாலும் அதனை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. வேலைக்காக படிக்க வெளியூர் சென்றவர்கள் விடுமுறை கிடைத்தால் எப்படியாவது பஸ், ட்ரெயின் எதையாவது பிடித்துக் கொண்டு ஊருக்கு சென்று சொந்த பந்தத்துடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அந்த வகையில் ரயிலில் முன்பதிவு முடிந்து விட்டால் பலரும் பேருந்துகளில் தான் செல்வார்கள். ஒரு சிலர் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வார்கள். ஆனால் தற்போது தனியார் பேருந்துகளின் விலை விண்ணை மட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக தற்போது பெரும்பாலான மக்களின் கவனம் அரசு பேருந்துகளின் பக்கம் திரும்பி உள்ளது. அந்த வகையில் அரசு போக்குவரத்து துறை சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளுக்கு, 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்குகிறது. அதன்படி அக்டோபர் 22ஆம் தேதி பயணம் செய்வதற்கான பேருந்து முன்பதிவு, நாளை தொடங்க இருக்கிறது. TNSTC இணையதளம் வழியாக பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யலாம். முதற்கட்டமாக 1000க்கும் மேற்பட்ட பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும். பின், தேவையை பொறுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.