தீபாவளி சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் எனும் எதிர்பார்ப்பானது பயணிகள் இடையே அதிகரித்துள்ளது. வருகிற 24ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்தஊர் செல்வோருக்காக தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனினும் சிறப்பு ரயில் தொடர்பான விரிவான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடவில்லை. கூட்டம் அதிகமிருக்கும் வழித் தடங்களில் ஓரிரு ரயில்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
பண்டிகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு வெளிவரவில்லை. தினமும் இயங்கி வரும் 85% ரயில்களில் டிக்கெட் முன் பதிவானது நிறைவடைந்து இருக்கிறது. கோவை மற்றும் சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வழித்தடத்தில் போகும் ரயில்களில் இருக்கைகள் நிரம்பி, காத்திருப்போர் பட்டியல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அதிகாரிகள் கூறியிருப்பதாவது “கூட்டநெரிசலுக்கு ஏற்றவாறு சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, திருவனந்தபுரம், எர்ணாகுளத்திலிருந்து சிறப்புரயில் இயக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த வார இறுதிக்குள் சிறப்பு ரயில் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். இப்போது முன்பதிவு நிறைந்துள்ள பெட்டிகளில் தேவையிருப்பின் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்” என்று கூறினர்.