தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஹரியாணா அரசு தடைவிதித்துள்ளது. மாசுபாட்டைத் தவிர்க்கும் அடிப்படையில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஹரியாணா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, குளிர்காலத்தை முன்னிட்டு ஏராளமான பண்டிகைகள் வருகிறது. இதற்கிடையில் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மாநிலத்தில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதில் மாசுபாட்டைத் தவிர்க்கும் அடிப்படையில் பசுமை பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும். பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் குறைவதோடு மட்டுமின்றி, இரும்புத்துகள்கள், நச்சுக்கள், பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள், நச்சு வாயுக்களையும் காற்றில் வெளியிடுகிறது. இதனால் பட்டாசு வெடிக்க அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதிக்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.