அரசு மதுக்கடையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து பல பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த தீபாவளி பண்டிகையின் போது 6 பேரும் மற்றும் ஹாபூரில் 7 பேரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ளனர். இந்த சோகம் இன்னும் மறையாத நிலையில் அம்மாநிலத்தில் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் அமாலியா கிராமத்தில் தற்போது ஐந்து பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பலியான அனைவரும் அரசு மதுபான கடை ஒன்றில் இந்த கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று சீல் வைத்துள்ளனர். மேலும் கடையை நடத்தி வந்த காவலர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.