தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தீபம் ஏற்றி கொண்டாடுங்கள் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாதம் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து நவம்பர் 30 வரை பட்டாசுக்கு தடை விதிக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அது மட்டுமன்றி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. கொரோனாவை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதற்கு ராஜஸ்தானில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் 10ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதோடு இவ்வருடம் விளக்குகளை ஏற்றி தீபாவளியை கொண்டாடுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.