சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள குமாரசாமிபேட்டை பகுதியில் மணிவண்ணன்- சியாமளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சிறுசேமிப்பு திட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளனர். இதனை நம்பி அதே பகுதியில் வசிக்கும் சுமி உள்பட நூற்றுக்கணக்கான நபர்கள் மாதந்தோறும் தலா 1,500 ரூபாய் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் 12 மாதம் சீட்டுத் தொகை செலுத்தியவர்களுக்கு இனிப்பு, காரம், தங்க நாணயம், பட்டாசு போன்றவை வழங்கப்பட்டன.
இதனை அடுத்து தங்கத்தின் விலை அதிகரித்ததால் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுப்பதாக மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ஆனால் கூறியபடி மணிவண்ணன் பணத்தை திருப்பித் தரவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சீட்டு நடத்தி தம்பதியினர் 16 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் தொகையை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணிவண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.