கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனம்பா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும் கோவிலின் ஸ்பெஷல் என்னவென்றால் கடைசி நாளன்று கோவிலில் பூஜை செய்து தீபம் ஏற்றப்பட்டு பிரசாதம் படைக்கப்படுகிறது. இதனை அடுத்து ஒரு வருடம் கழித்து நடை திறக்கும் போது ஹாசனாம்பா தேவி அருளால் ஏற்றப்பட்ட தீபம் அனையாமலும் படைக்கப்பட்ட பிரசாதம் கெட்டுப்போகாமல் இருப்பதாக பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த சூழலில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 13-ஆம் தேதி (நாளை) முதல் 27ஆம் தேதி வரை ஷாசனம்பா கோவில் நடை திறக்கப்படுகின்றது. இதனை அடுத்து முதல் நாளான நாளை கோவில் திறக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதனால் முதல் நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது மக்கள் பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொள்கின்றனர். மேலும் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் 27ஆம் தேதி நடை சாத்தப்படும் போன்ற இரண்டு நாட்களுக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை இதற்கு இடைப்பட்ட தினங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் நடை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஹாசன் மாவட்ட நிர்வாக கருவூலத்தில் இருந்த சாமி நகைகள் அனைத்தும் புஷ்ப பல்லக்கு மூலமாக கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி தாசில்தார் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.