தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே காரைக்குடி மற்றும் அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படுகிறது. இதன்படி திருநெல்வேலி சந்திப்பு சிறப்பு ரயில் அக்டோபர் 21-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை சென்றடைகிறது. மீண்டும் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னையை சென்றடைகின்றது.
இந்த நிலையில் இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருத்தாசலம், சிவகங்கை, சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர் போன்ற இடங்களில் நின்று செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அக்டோபர் 19ஆம் தேதி காலை 8 மணி முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல் சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி செல்லும் 10,500 பேருந்துகளை ஒதுக்கி இருக்கிறது.
மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் சிவசங்கர், செயலர் கே கோபால் போன்றோர் தலைமையில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சென்னையிலிருந்து அக்டோபர் 21 முதல் 23ஆம் தேதி வரை 10518 பேருந்துகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 9,362 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றிய தகவல் மற்றும் புகார்களை பெறுவதற்கு 24 மணி நேரமும் உதவி மையம் இருக்கிறது. இதனை அடுத்து அதிக டிக்கெட் கட்டணம் பற்றிய புகார்களை பெற கோயம்பேடு முனையத்தில் பிரத்தியேக புகார் பிரிவு திறக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.