வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு மாநிலங்களில் 200 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் திட்டம் தீட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை காலவரையின்றி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த மே மாதம் 12ஆம் தேதி 30 ராஜதானி சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி 200 சிறப்பு ரயில்களும் அதன்பிறகு செப்டம்பர் 12ம் தேதி என்பது சிறப்பு ரயில்களும் ஓடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த மாதம் ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் வருவதாலும்,அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதாலும் மேலும் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே ஆணையம் திட்டம் தீட்டியுள்ளது.
இதுபற்றி ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறுகையில், “பண்டிகை காலத்தை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 30-ஆம் தேதி வரையில் மேலும் கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக அனைத்து ரயில்வே கோட்ட பொது மேலாளர் களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்களிடம் உள்ளூர் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்குமாறு கூறியிருக்கிறோம்.
அவர்கள் அறிக்கை அளித்த பின்னரே எத்தனை சிறப்பு ரயில்களை இயக்குவது என்ற முடிவு செய்யப்படும். தற்போதைக்கு மேலும் 200 சிறப்பு ரயில்களை இயக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளோம். இது வெறும் மதிப்பீடு மட்டுமே இன்றி மேலும் அதன் எண்ணிக்கை உயர்த்த நேரிடும்.ஒவ்வொரு மாநிலங்களிலும் நிலவரத்தை ஆய்வு செய்வது மட்டுமல்லாமல் மாநில அரசின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் ரயில்களை கட்டாயம் இயக்குவோம். பயணிகளின் பட்டியல் அதிகமாக இருக்கின்ற வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்”என்று அவர் கூறியுள்ளார்.