அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வா டீல் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது அக்னி சிறகுகள், சினம், பாக்சர், பார்டர், யானை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் றெக்க, சீறு போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ரத்தினசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள வா டீல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் கார்த்திகா நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் சில காரணங்களால் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது .
இந்நிலையில் வா டீல் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் வா டீல் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.