தீம் பார்க்கில் குளித்து கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகன் அஜித்குமார்(24). அஜித்குமாரும் அவருடைய நண்பரும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெண்ணந்தூர் அருகே சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள பரவச உலகம் தீம் பார்க்கில் குளித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக அஜித்குமார் நீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அஜித் குமார் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.