அண்ணனே தம்பியை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே விரிவிளை பள்ளிக்கல் பகுதியில் பிரைட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு டென்னிஸ் என்ற சகோதரர் இருக்கிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரின் மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து சென்றுள்ளனர். இதனால் டென்னிஸ் மற்றும் பிரைட் ஆகிய 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பிரைட் மற்றும் டென்னிஸ் ஆகிய 2 பேருக்கும் இடையே மதுபோதையில் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் அக்கம்பக்கத்தினர் யாரும் இவர்களுடைய சண்டையை கண்டுகொள்ளவில்லை.
அதன்பிறகு பிரைட் வீட்டிற்கு அவருடைய நண்பர் ஒருவர் சென்றுள்ளார். அவர் பிரைட் எங்கே என்று டென்னிசிடம் கேட்டதற்கு அவர் முண்ணுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிரைட்டின் நண்பர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பிரைட் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரைட்டின் நண்பர் நித்திரவிளை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரைட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் டென்னிசை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அண்ணன் – தம்பி 2 பேருக்கும் இடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் டென்னிஸ் தனது தம்பியை உயிரோடு எரித்துக் கொன்றுள்ளார். அதன்பிறகு என்ன செய்வது என்று தெரியாத டென்னிஸ் மது குடித்துவிட்டு பிணத்துடன் வீட்டில் தூங்கியுள்ளார். அதன்பிறகு மறுநாள் காலை பிரைட்டின் நண்பர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தத சம்பவம் வெளியானது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.