நாமக்கல் மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் வெல்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் அடுத்த பாச்சல் அருகே உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் யூனியன் வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வங்கி ஏடிஎம் மையத்தில் சென்ற ஐந்தாம் தேதி அதிகாலை திடீரென தீ பற்றிய காரணத்தால் அதில் இருந்த இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது. இந்த சம்பவம் பற்றி வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கல்லூரி வளாகத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், மூன்று நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று ஏடிஎம் மையத்துக்குள் வெல்டின் இயந்திரத்துடன் சென்றதையும் அவர்கள் வெளியே வரும்போது ஏடிஎம் இயந்திரம் தீப்பற்றி எரிவதையும் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து புதுச்சத்திரம் காவலர்கள் நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த டாரஸ் லாரியில் இருந்து மூன்று நபர்கள் இறங்கி தப்பி ஓடினர்.அந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் 3 பேரும் ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தை சேர்ந்த சைகுல், முகமது சராபத் மற்றும் முகமது ஜீனித் என்பதை அறிந்தனர். இந்த மூன்று நபர்களும் சென்ற 5 ஆம் தேதி ஹரியானாவில் இருந்து மதுரைக்கு சரக்குகளை ஏற்றி வந்துள்ளனர். லோடு இல்லாத காரணத்தால் ஆந்திராவிற்கு செல்ல முயற்சி செய்தபோது, ஆள் நடமாட்டம் இல்லாத ஏடிஎம் மையத்தில் வெல்டிங் இயந்திரத்தின் மூலமாக கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்த புதுச்சத்திரம் காவல்துறையினர் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்திய லாரி மற்றும் யந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். தீரன் திரைப்படத்தில் வருவதுபோல் பகலில் லாரி ஓட்டுனர்கள் ஆக பணியாற்றி ஆள் நடமாட்டம் மற்றும் காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை கண்டறிந்து இரவில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.