பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதி அருகே வாகன சோதனையின் போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதி அருகே வட்ட வழங்கல் அலுவலர் திலகவதி தலைமையில் பறக்கும் படையினரும், காவல்துறையினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் ஆவணமில்லாமல் ரூ.1 லட்சம் பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்லவாடி தெற்கு தெருவில் வசித்து வரும் தீனதயாளன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அவரிடம் இருந்த ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்தனர். அதன் பின் அந்த பணத்தை குன்னம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கரிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.