கொடைக்கானலில் ஆவணம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்று தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கொடைக்கானல்-பழனி சாலையில் பறக்கும் படைவீரர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் ரூ.50 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் சோழவந்தான் பகுதியில் வசித்து வரும் அரவிந்த் குமார் என்பதும் தெரியவந்தது. அந்த பணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தனியார் நிதி நிறுவனத்திற்கு பணம் கொண்டு செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொடைக்கானல் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.