வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு அசானி என பெயரிடப்பட்டது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிரமடைந்தது. மேலும் இந்த புயல் நாளை மாலை வடக்கு ஆந்திர- ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும். பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிலும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை, கடலூர், திண்டுக்கல், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 12-ந் தேதி வரை தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும். அசானி புயல் காரணமாக கடல் பகுதியில் இன்று மணிக்கு 105 கிலோ மீட்டர் முதல் 125 கிலோ மீட்டர் வரை காற்று வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.