சிவகங்கையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக நடைபெறும் அனைத்து செயல்களையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்ட டாஸ்மார்க் அலுவலக அலுவலர்கள் மற்றும் மாவட்ட கலால் துறை குழு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் சட்ட விரோதமான செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர்.
அப்போது சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவருடைய பெயர் முத்துசாமி என்றும், அவர் 19 மதுபாட்டில்களை மறைத்து வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 19 மது பாட்டில்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோன்று சிவகங்கை டவுன் மரக்கடை பேருந்து நிலையம் அருகே அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்திரன் என்பவரிடம் இருந்து 9 மது பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.