ஒடிசா கடற்கரை பகுதிகளில் வருகின்ற மே 10ஆம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது தற்போது அசானி புயலாக உருவாகி இருக்கிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும். இதனை தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளை சென்றடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி 16 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல்விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் அசாணி புயலால் இதுவரை தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் வரும் மே 10-ஆம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.