உக்ரைன் மீது ரஷ்யா கடந்து பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் உக்ரைன் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றிலுமாக நாசமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யா போர்க்கப்பல்கள் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தில் உள்ள செவ்வஸ்டோபோல் நகரில் ரஷ்ய கருங்கடல் கப்பற் படையின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை இந்த கப்பற்படை தலைமையகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. டிரோன் மூலம் குண்டுகள் வீசப்பட்டதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இது பற்றி கூடுதல் தகவல்களை வழங்க அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் ரஷ்யாவில் நேற்று கப்பற்படை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.