அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் வரும் 16 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பிற்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா தேர்தலுக்கு முன்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் அவர் பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து பேசி வந்தார்.
கடந்த 2 மாதங்களாக தொலைபேசி கலந்துரையாடல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வரும் 16 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ‘இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வழிநடத்தும் பொறுப்பு தனக்கு இருக்கிறது ‘ என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதனால் வரும் 16-ஆம் தேதிக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை சசிகலா தீவிரப்படுத்தலாம் என்று அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது. சசிகலாவின் அறிவிப்பு எடப்பாடி தரப்பை கலக்கத்தில் ஆழ்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.