சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர போதைப் பொருள் மற்றும் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்பிறகு போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக ரயில்வே நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோட்டார் ரயில்வே நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் ஓடியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை விரட்டி பிடித்துள்ளனர். அதன்பிறகு வாலிபர்கள் கையில் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதில் கஞ்சா, போதை மாத்திரைகள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வாலிபர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கோவில்விளை பகுதியைச் சேர்ந்த விஜயன், ஆரோக்கியராஜ், பிரபாகரன், ரத்தினம், அருண் என்பது தெரியவந்தது. இவர்கள் ரயில் மூலமாக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.