கஞ்சா கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாம்மத்துகோணம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெரீஸ், பிரகாஷ், வினோத் ஆகியோர் என்பதும், கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரு நிறுவனத்திற்கு கஞ்சாவை கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் அந்த பார்சல் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை செய்தார். அந்த சோதனையில் சென்னை கல்லூரியில் என்ஜினியரிங் படித்து வரும் வீரமணி, திபு ஆகிய 2 பேர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் கஞ்சா வியாபாரிகளை தொடர்பு கொண்டு கஞ்சாவை வாங்கியதும், இவர்கள் வாங்கிய கஞ்சாவை ஜெரீஸ், வினோத், பிரகாஷ் ஆகிய 3 பேரும் வாங்கி அலுவலகத்திற்கு கொண்டு வந்த போது காவல் துறையினரிடம் சிக்கியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட 5 வாலிபர்களின் செல்போன், வங்கி கணக்கு போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.