சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் காவல்துறையினர் மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பதும், மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் வெங்கடேஷை கைது செய்தனர்.
இதேபோன்று பட்டகசாலியன்விலை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது விற்பனை செய்து கொண்டிருந்த வட்டவிலை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் நேற்று ஒரு நாள் மட்டும் 15 நபர்களை மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.