வனப்பகுதிக்குள் திடீரென ஒரு யானை இறந்து கிடந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து இறந்து கிடந்த யானையை மருத்துவர் சோதனை செய்தபோது வயது முதிர்வின் காரணமாக இறந்ததாக கூறினார். இந்த ஆண் யானைக்கு சுமார் 40 வயது இருக்கும் என்று மருத்துவர் கூறியுள்ளார். இந்த யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு காட்டில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. மேலும் யானையின் தந்தங்கள் மற்றும் கோரப் பற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வனத்துறை அலுவலகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.