சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், ராமச்சந்திரன், ஏட்டு செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் சட்டவிரோதமாக வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக வேனில் கடத்தி வந்த 22 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காதர் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.