தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வடசேரி காவல்துறையினர் ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின், அருண் துளசி, ஷாஜி என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவிலிருந்து ஆம்னி பேருந்து மூலமாக நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர்.
இவர்கள் கையில் இருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 54 கிராம் இருந்தது. இது மெத்தாம் கேட்டமைன் என்று அழைக்கப்படும் சர்வதேச அளவில் புழக்கத்தில் இருக்கும் போதைப் பொருள் ஆகும். இதன் மொத்த மதிப்பு 6 லட்ச ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் கூறியுள்ளனர். பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.