தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
அதில் மொத்தம் 218 கிலோ இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 2,18,000 ரூபாய் ஆகும். இதனையடுத்து காவல்துறையினர் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஏழுமலை மற்றும் அஜித் ஆகிய 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.