கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முத்து ராஜேந்திரன், மனைவி சாந்தி, மகன் அழகு வேல்ராஜன், உறவினர் சகுந்தலா தேவி உள்ளிட்டோர் மதுரையில் நிகழ்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு நேற்று முன் தினம் சென்று விட்டு இரவு சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தார்கள். நேற்று அதிகாலை கார் ஞானோதயம் கிராமத்தில் வந்து கொண்டிருந்த பொழுது கும்பகோணம் நோக்கி சென்ற லாரியும் இந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில் முத்து ராஜேந்திரன், சாந்தி, அழகுவேல் ராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். பின்படுகாயம் அடைந்த சகுந்தலா தேவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.