மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஸ்கட் நாட்டில் வேலை பார்க்கும் வடிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இன்று காலை ராஜேஷ் குமார் என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் துக்க நிகழ்ச்சிக்கு பூ வாங்குவதற்காக கும்பகோணத்திற்கு சென்று விட்டு சாக்கோட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பேருந்து திடீரென வடிவேலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து காயம் அடைந்த ராஜேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வடிவேலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி துடிக்கும் காட்சி பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.