சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள ராம்நகர் ஆறாவது வீதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கண்மணி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திகேயன் வேலைக்கு சென்றுவிட்டார். கண்மணி அமராவதிபுதூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் கண்மணி மாலை 3.30 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவை ஆய்வு செய்த போது 3 1/2 கிலோ வெள்ளி பொருள்கள், 30 பவுன் தங்க நகை, ரூ. 6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து தேவகோட்டை காவல்நிலையத்தில் கண்மணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.