தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இறவுசேரி கிராமத்தில் தொழிலாளியான சோமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் வேம்பரசன் என்ற மகனும், 4-ஆம் வகுப்பு படிக்கும் அபிருதா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் தேன்மொழி தனது அக்கா சுமதியின் வீட்டிற்கு வேம்பரசன், மற்றும் அபிருதாவுடன் சென்றுள்ளார். அங்கு அண்ணன் தங்கை இருவரும் குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அருகில் சுமதி துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அபிருதா பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.