தண்ணீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சாத்தான் குப்பம் பஜனை கோவில் தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகேஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார்(19), விஜய்(19) ஆகியோரும் நண்பர்கள் ஆவர். மூன்று பேரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நண்பர்கள் மூன்று பேரும் திருப்போரூரில் இருக்கும் விஜயின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு குளத்தில் இறங்கி மேல் படிக்கட்டுகளில் அமர்ந்த படி துணி துவைத்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து பாசி படிந்த படிக்கட்டுகளில் கால் வைத்த போது எதிர்பாராதவிதமாக உதயகுமாரும், முகேஷும் குளத்திற்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் மூன்று பேரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.