நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட முன்வந்துள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் “காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்” வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது.
எனவே கர்நாடகம் தொடங்கி தமிழகத்தின் மேட்டூர் அணை வரை நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி குறித்தான அனைத்து அணைகளின் நீர் நிர்வாக அதிகாரங்கள் தற்போது ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மேலும் கண்காணிப்பு குழுவும் இதன் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆணையத்தை முடக்குவதற்கான மறைமுக சதியில் கர்நாடக அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தின் மேட்டூர் அணை வரை தற்போது ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெற்றால் தான் புதிய குடிநீர் திட்டம் அறிவிக்க முடியும். ஆனால் குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் எந்த தடையும் இல்லை.
எனவே ஆணையத்தின் மூலம் தான் அதற்கான அனுமதியை பெற வேண்டும். இதனை அரசுக்கு எடுத்து கூறி தமிழக நீர்பாசன துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆணைய அனுமதியை பெறுவதற்கு முன்வரவேண்டும். இல்லையென்றால் தமிழக அரசு ஆணையத்தை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூற வேண்டிய நிலை ஏற்படும் என்று பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார்.