அச்சக தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் சிவகாசியை சேர்ந்த அந்தோணிராஜ் என்பது தெரியவந்துள்ளது.
இவர் ஒரு அச்சகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய அந்தோணிராஜ் கோவில்பட்டி ராஜீவ் நகரில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் மன உளைச்சலில் இருந்த அந்தோணிராஜ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.