குழந்தையின் உடலை தண்டவாளத்தில் வீசி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலையில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் நாய்கள் கடித்து குதறிய நிலையில் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பொதுமக்கள் துண்டுதுண்டாக கிடந்த குழந்தையின் உடலை ஒரு கூடையில் அடைத்து தெருநாய்களை அங்கிருந்து விரட்டினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்த போது தெருநாய்கள் கடித்து குதறியதில் குழந்தையின் கை, கால்கள் துண்டு துண்டாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு குழந்தையின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் உடலை தண்டவாளத்தில் வீசி சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.