டெல்லியில் வயதான மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த மூதாட்டி கவிதா. இவருக்கு 72 வயது ஆகிறது. இவர் வீட்டின் அருகே வசித்து வரும் அனில் ஆர்யா மற்றும் தனு ஆர்யா என்ற தம்பதிக்கு ஒரு லட்சம் ரூபாயை கடனாக வழங்கியுள்ளார். இதை சென்ற மாதம் 30ஆம் தேதி திருப்பி கேட்டுள்ளார். இதனால் தம்பதிகள் இருவரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்ய திட்டமிட்டனர். முதலில் மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர், அவரது உடலை துண்டு துண்டாக நறுக்கி 3 பைகளில் அடைத்து ஒரு ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்து அருகில் உள்ள வாய்க்காலில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
அதோடு கொலை செய்த பிறகு அவரது உடலில் இருந்த நகைகளை எடுத்து அதை அடகு நிறுவனம் ஒன்றில் வைத்து 70,000 ரூபாய் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் பிளாஸ்டிக் பையில் எதையோ எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த சம்பவங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்த தம்பதிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.