துபாயில் நடந்து வரும் சர்வதேச எக்ஸ்போவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக துபாய் புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் மேற்கொள்ளவுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இது ஆகும். கடந்த வருடம் மேமாதம் 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து தமிழகத்தில் தொழில்துறையில் முன்னேற்றம் அடைவதற்காக பல நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் 192நாடுகள் கலந்துகொள்ளும் துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு சார்பில் இம்மாதம் இறுதியில் கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனை ஏற்று தமிழகம் சார்பாக துபாய் கண்காட்சியில் அரங்கம் அமைக்கப்படுகிறது.
இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் வாயிலாக இன்று துபாய் புறப்பட்டார். அதனை தொடர்ந்து துபாயில் 4நாள் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்பதற்காக அமீரகதமிழர்கள் சார்பாக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒருசில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இப்பணிகளை முடித்துக்கொண்டு வரும் 28 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.