துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 கண்காட்சியை 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
இது குறித்து துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் உயர்மட்டக் குழுவின் தலைவரும், எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவரும் துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவருமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் கூறியிருப்பதாவது “துபாய் நகரில் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் முதல் முறையாக எக்ஸ்போ 2020 கண்காட்சி சென்ற வருடம் (2021) அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி வரை நடந்தது. இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், சவுதி அரேபியா உட்பட 192 நாடுகள் கலந்துகொண்டன.
மனங்களை இணைத்து, எதிர்காலத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சர்வதேச கண்காட்சி உலகின் பல நாட்டை சேர்ந்தவர்களையும் ஊக்கப்படுத்தும் அடிப்படையில் அமைந்திருந்தது. தினசரி இந்த கண்காட்சியை அமீரகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பார்வையிட்டனர். அந்த அடிப்படையில் மொத்தம் 182 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியை 2 கோடியே 41 லட்சத்து 2 ஆயிரத்து 967 பேர் பார்வையிட்டுள்ளனர்.
துபாயில் நடைபெற்ற இந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இவை ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்கும் அடிப்படையில் இருந்துள்ளது. அமீரகத்தின் 50வது வருட தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிற இந்த வேளையில் இந்த கண்காட்சி வரலாற்றில் முக்கியமான இடத்தை வகிக்கும். இந்த சிறப்பான உலக கண்காட்சியை நடத்த ஆதரவு வழங்கிய அமீரக தலைவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.